ஒரு ஞானியை அணுகிய சீடன், "காதலுக்கும் திருமணத்திற்கும்" உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும்; முதலில் நீ அருகே உள்ள ரோஜா தோட்டத்திற்கு சென்று, அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதிலிருந்து ஒரு ரோஜாவை பறித்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை, நீ எக்காரணம் கொண்டும் சென்ற வழியே திரும்பி வரக் கூடாது" என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.
ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான ரோஜாச் செடியின் மலர்?" என்று கேட்டார்.
சீடன், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. சென்ற வழியே திரும்ப வரக்கூடாது என்பதால், முன்னர் பார்த்த உயரமான செடியின் மலரையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது" என்றான்.
பின்னர் ஞானி, "சரி போகட்டும், அருகே உள்ள வயலில் உன் கண்ணுக்கு அழகாகத் தோன்கிற ஒரு சூரியகாந்திப் பூவை பறித்துக் கொண்டு வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு பூவை பறித்த பின் வேறு ஒரு பூவை பறிக்கக் கூடாது" என்று கூறினார்.
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரியகாந்தி பூவுடன் வந்தான்.
ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரியகாந்திப் பூவா..? "
சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான பூக்கள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை நழுவ விட்டது போல் இந்த முறையும் நழுவ விட்டு விடக்கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்தப் பூவை பறித்து வந்து விட்டேன்.
நிபந்தனைப்படி, ஒரு பூவினை பறித்த பின் வேறு பூவை பறிக்கக் கூடாது என்பதால், அதன் பிறகு இதை விட அழகான பூக்களை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".
இப்போது ஞானி சொன்னார், "நீ முதலில் பறிக்க சென்ற மலர் தான் காதல்; பின் இரண்டாவதாக சென்று பறித்து வந்த மலர் தான் திருமணம்.
இது தான் காதலுக்கும், திருமணத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்" என்றார்.

No comments:
Post a Comment